"கண்ணி மருப்பின் அண்ணல் நல்ஏறு
செங்காற் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்காண் மரையா நோக்கி வெய்துறறு;"
சுயஅரிப்பு
- நாம் மேற்கொள்ளும் தற்சார்பு வாழ்க்கை நல்லதிசையில் நகர்ந்து உபரி மிகுதியாகும்போதெல்லாம் நம் வாழ்க்கை முறைக்கு ஒத்திசைவான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அதிலிருந்து விலகி கார் வாங்கலாமா? கப்பல் வாங்கலாமா? என்று மனதை அலைபாய விடக்கூடாது.
- நாம் நமக்கு பிடித்தமான காரியங்களில் கவனம் செலுத்தி வாழ்ந்தாலும் சுற்றமும் நட்பும் சும்மா இல்லாமல் சுரண்டிக்கொண்டேயிருக்கும். எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படும்போது நாமே சொரிந்து சுகம் காண்கிறோமோ அதேபோல் நாமும் நம்முடைய வாழ்க்கையில் பிறர் தலையீடுல்லாமல் பார்த்துக்கொள்ள தற்சார்பு வாழ்க்கையில் நிறையவே வழிகள் இருக்கிறது.
- அஃது யாதெனில் தற்சார்பு விளையாட்டுக்குத்தேவையான ஆநிரைகளை மொத்தமாக கொள்முதல் செய்யவும், அவற்றை விளையாட்டுக்குப்பழக்குவதும் ஆகும்.
விளையாட்டு
மூக்கணாங்கயிற்றை அறுத்தவுடன் வாடியிலிருந்து சீறிப்பாயும் காளைகளையும், அதனை அடக்கும் காளையர்களையும் ஒளிப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். ஆனால் ஜல்லிக்கட்டிற்குத்தேவையான கன்றுகளை தேர்வுசெய்வதில் துவங்கி, நீச்சலுக்கு பழக்குவது, பெரிய வாடிக்கு வருவதற்கு முன்பு சின்னதாக வாடிகட்டி காளையும், காளையரும் ஒத்திகை பார்ப்பது வரை பாரிய உழைப்பைக்கோரி நிற்கும் ஒவ்வொரு மரபு விளையாட்டும். விளையாட்டுக்கு காளைகளைப்பழக்குவது, காளைகளுடன் நாம் விளையாடுவது, விளையாட்டில் காளைகளுக்கு அடிபட்டுவிட்டால் அதற்கு முறையான மருத்துவம் செய்வது, என அது நம்முன்னே நிறைய துறைகளை திறந்து வைத்திருக்கும்.
அதேபோல் ரேக்ளாவுக்கு காளைகளைப்பழக்குவதும், அதற்குத்தேவையானமாட்டு வண்டிகளை தயார்செய்வதும் பாரிய உழைப்பைக்கோரி நிற்கும் ஒரு விளையாட்டு வடிவம்தான். அதில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்ளும்போது நம் வாழ்க்கை எல்லையில்லாத திசையை நோக்கி வளர்ந்துகொண்டேயிருக்கும்.
அடிசில்:
அக்காரம் என்றால் கற்கண்டு அல்லது கரும்பு வெல்லம் இவற்றைக்கொண்டு செய்வது அக்கார அடிசல்.... நெய் சேர்த்து செய்தால் நெய்யுடை அடிசில்.... பால் சேர்த்து செய்தால் பாலுடை அடிசில்... இப்படி அடிசிலில் பலவகை இருந்தாலும் குழைவாக ஆக்கிய நெல்லரசிச்சோறு என்று பொதுப்பெயரில் அழைக்கப்படுவதுமுண்டு.
கலவை:
சோற்றுடன் வேறுசில பொருட்கள் சேர்த்து சமைக்கப்படும் உணவே கலவையுணவு. எகா. புளியோதரை சாதம், கறிவேப்பிலை சாதம், தக்காளிசாதம்.
கும்மாயம்:
கும்மாயம் என்பது வேகவைத்த பருப்பு. இவற்றை உளுந்து பாசிப்பயறுமாவு, நெய், பனங்கருப்பட்டி சேர்த்து ஒரு வகை இனிப்பு பலகாரமாகவும் செய்யலாம்.
மூரல்:
சரியாக வேகாத சோறு விதைவிதையாய் இருக்கும். நன்றாக வெந்துவிட்டால் குழைந்துபோகும். இரண்டிற்குமிடையில் சரியான பதத்தில் இருந்தால் குழம்பு கூட்டி சாப்பிட இதமாயிருக்கும் சோறு மூரல் எனப்படுகிறது
மோதகம்:
கற்கண்டை இளக்கிப்பாகாக்கி செய்யப்படும் ஒருவகைக்கொழுக்கட்டை.
களி:
கொதிக்கின்ற நீரில் மாவைச்சிறிது சிறிதாகச்சேர்த்துக்கலக்க வேண்டும். அது கெட்டிபடும் நிலை வரும்போது துடுப்புகொண்டு நன்றாக கிண்ட களி தயாராகும். எகா: கேப்பைக்களி, உளுந்தங்களி, வெந்தையக்களி.
நுவணை:
கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானி மாவுடன் இனிப்பு கலந்து செய்யப்படும் ஒருவகை இனிப்புருண்டை.





