கோ.நம்மாழ்வார்(1938 – 2013)
கோ.நம்மாழ்வார்
பெருநகர நெரிசலின் போது, ‘ சிக்னளில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்களில் அமர்ந்திரிப்போரை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?
எவர் முகத்திலும் சிறு புன்னகைக்கூட இல்லாமல் ஒரு உக்கிரமான போருக்குப்புறப்பட்டு செல்லும் வேகமிருப்பதைக்கவனித்திருக்கிறீர்களா?
ஏனிந்த வேகம்?
யாருக்காக இந்த ஓட்டம்?
இரைதேடும்பொருட்டு காற்றைக்கிழித்து பறந்துசெல்லும் பறவைகள் அந்திசாயும்போது வீடு திரும்புகையில் மனிதர்களாகிய நாம் மட்டும் இலவுகாத்த கிளியைப்போல இரவெல்லாம் கண்விழித்து வேலைபார்க்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
சரி! இதற்கு முன்பு அவற்றையெல்லாம் கவனித்திருந்தாலும் கவனிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை. இனி அதற்காக ஒருநாள் ஒதுக்கி கவனிக்க ஆரம்பியுங்கள். என்னது சும்மா ஒருநாளை ஒதுக்கனுமா? இது நல்ல கதையா இருக்கேன்னு நீங்க நெனச்சா அது உங்க தப்பில்லை! நீங்கள் செலவளிக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் பணமாக மாற்றும் வித்தையை கற்றுத்தந்த உங்கள் கல்வி முறையே அதற்க்கு காரணம்.அதையும்மீறி ஒருதாளை எடுத்து நீங்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்த பணத்தை எவற்றிக்கெல்லாம் செலவிடுகிறீர்களென்பதை எழுதத்துவங்குங்கள்.பெரும்பாண்மை பணம் கல்வி, மருத்துவம், சந்தைக்கு புதிதாக வந்துசேரும் எந்தவொரு பொருளையும் ஆய்வுக்குட்படுத்தாமல் நுகருதல், கேளிக்கை, நல்லது, கெட்டது இன்னபிறவற்றிக்கெல்லாம் போக மீதமில்லாமல் உடல்நலம் கெட்டு நின்றுகொண்டிருப்பது தெரிந்தால்… பாவம் நீங்கள் மீளவே முடியாத ஒற்றைவழிப்பாதையில்சென்றுகொண்டிருக்கிறிர்களென்று அர்த்தம்.
இன்றைக்கு நீங்கள் கருதிக்கொண்டிருக்கும் பெருமைமிகு வாழ்க்கையின் பயணம் எங்கேயிருந்து ஆரம்பமானது என்று ஆராய ஆரம்பித்தால் விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து மேற்கு நோக்கி கரிசல்காட்டுப்புழுதியில் செல்லும் மாட்டுவண்டித்தடமாகவோ, தருமபுரி மாவட்டம் அரூரிலிருந்து கிழக்காக பிரிந்துசெல்லும் ஒற்றையடி கரட்டுப்பூமி பாதையாகவோ, டெல்டாவின் ஏதோவொரு அடையாளந்தெரியாத குக்கிராமமாகவோ இருக்கக்கூடும்.
கிராமத்திலிருக்கும்போது பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கஞ்சியோ, கூழோ இருப்பதைக்குடித்துவிட்டு நிம்மதியாக இருந்தோம். ஆனால் இன்று எல்லா வசதி வாய்ப்புகளையும் தந்த நகரம் நிம்மதியை மட்டும் பறித்துக்கொண்டதே! என்று கையறு நிலையில் நீங்கள் நிற்பதைப்போல அறுபதுகளில் ஏழுபேர்கொண்ட குழுவிற்கு தலைமையேற்றிருந்த அந்த வேளாண் விஞ்ஞானிக்கும் இருந்தது.
யோசித்து யோசித்து பார்க்கிறார் தன் மேலதிகாரிகள் சொன்ன அனைத்து இரசாயனங்களையும் பயன்படுத்திப்பார்த்தோம். பூச்சித்தொல்லை அதிகமாகும்போதெல்லாம் பூச்சிக்கொல்லி தெளித்தோம். மொத்தத்தில் கூட்டி கழித்துப்பார்த்தால் நட்டக்கணக்கு வருகிறதே! குழம்ப ஆரம்பித்தார். மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தன் சந்தேகத்தை உறுதிசெய்யும் பொருட்டு மேலதிகாரியை நச்சரிக்க ஆரம்பித்தார். மேலதிகாரி இவரது தொல்லை தாங்க முடியாமல் ‘சார், மேலிடம் சொல்கிறார்கள் நாம் செய்கிறோம். உங்கள் சந்தேகம் தீரனும்னா மேலிடத்திற்கு கடிதம்போட்டு பதில் பெற்றுக்கொள்ளுங்கள் ‘ என்று சொன்னதையடுத்து சென்னைக்கு கடிதம் எழுதுகிறார்.
சென்னையிலிருந்து வந்த கடிதம் டில்லியைக்கைகாண்பித்தது. டில்லி அமெரிக்காவை கைகாண்பித்தது. அமெரிக்கா ஃபோர்டு நிறுவனத்தை கைகாண்பித்தது. ஒரு மகிழுந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபோர்டுக்கு அப்படியென்ன நம் விளைநிலத்தின்மீது அக்கறை வந்தது? என்று யோசிக்கும்போது அவருக்கு ஒரு விஷயம் தெளிவாகப்புலப்பட்டது. ஒரு வேளாண்குடிமகனிடம் விதை, உரம், தொழில்நுட்பம், உழைப்பு இவை நான்கும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு குழந்தைக்கு மிட்டாயைக்கொடுத்து ஏமாற்றுவதைப்போல உழவனிடம் உழைப்பைத்தவிர மற்ற மூன்றையும் வளர்ச்சி என்கிற ஆசை வார்த்தை காட்டி பிடுங்கியிருக்கிறார்கள்.
அந்த ஆசை வார்த்தை பயணிக்கும் நூலின் பின்னாலேயே போய்ப்பார்த்தால் அந்த நூல் இந்தியாவிற்கு இராபர்ட் கிளைவ் வந்துசென்ற தடத்தில் முடிச்சி போடப்பட்டிருப்பதைக்கண்டுபிடித்தார்.
எமது மக்கள் பல்லாயிரமாண்டுகாலம் தூக்கிச்சுமந்து வந்த மரபு அறிவை எவ்வளவு லாவகமாக வீழ்த்தியிருக்கிறார்கள்? இதை இப்படியே விட்டு வைத்தால் மிகப்பெரிய பேராபத்தில் போய் முடியும். மீட்டாக வேண்டும். என்ன செய்யலாம்? யோசிக்கிறார்.
அவர்முன் இருந்த வாய்ப்பு இரண்டு. ஒன்று எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்னவென்று அமைதியாக இருந்து கொண்டு அரசு தருகிற அத்தனை சௌகர்யங்களையும் அனுபவித்துக்கொண்டு கடந்து போவது. மற்றொன்று தன் நாட்டின் மக்கள் இழந்து நிற்கும் மரபு அறிவை மீட்டெடுக்க ஒரு நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டியது. முந்தையது பணம், பதவி, புகழ் போதை நிறைந்தது. பிந்தையது பசி, அவமானம், வலி மிகுந்தது.
அவருக்கு அப்போதுதான் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. அவர் அறத்தின் வழி நின்ற மறவர். ஆதலால் வலி மிகுந்த இரண்டாவது பாதையை தேர்ந்தெடுத்து தலையில் கட்டியிருந்த உருமாலை அவிழ்த்து நாட்டு மக்களின் நலனைப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் சேர்த்து தன் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அன்று ஆரம்பித்த அவரது பயணம் தொடர்ந்து உழைக்கும் வேளாண் குடிகளுக்காக பேசியும் எழுதியுமே வந்திருக்கிறது. இறுதியாக அவர் மரணிக்கும் முன்பு தற்சார்பு வாழ்வியலை நேசிக்கும் ஒவ்வொருவருக்குமான வாசலை அகலத்திறந்துவிடும் முகமாக ‘வானகம்’ என்கிற அமைப்பைக்கட்டியது வரை நீண்டது. இன்றைக்கு பெரு நகரங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக நீங்கள் தேடித்தேடி நுகர விரும்பும் இயற்கை அங்காடிகள் அவரின் வலி மிகுந்த பயணங்களில் விளைந்தவையே!