"யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும் "

 

 
-பரிபாடல்

முன்னத்தி ஏர் புகழ் வணக்கம்

உலகில் தோன்றிய உயிரினங்களில் மனிதனைப்போல மிகவும் பயந்த ஒரு உயிரினம் வேறொன்றுமில்லை எனலாம்.

பூமியில்  தோன்றும் மற்ற உயிரினங்கள்  ஓரிரு  நாட்களில், மாதங்களில், வருடங்களில் தனித்து வாழும் தகுதியைப்பெற்றிருக்கும்போது மனிதக்குழந்தைக்கு மட்டும் குறைந்தது ஐந்து வயது வரை குடும்பம் என்கிற அமைப்பின் அரவணைப்பும், பதினைந்து வயது வரைக்கும் சமூக அமைப்பின் பாதுகாப்பும் தேவைப்படுகிறது.

ஒரே பண்புகளைக்கொண்ட மனித உயிர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழும் போது அது இனமாகிறது. அந்த வாழ்க்கை மேலும் சிறப்புற அமைய மதம் உருவாகிறது. அதன் அடுத்தக்கட்டமாக  மொழி உருவாகிறது.

எல்லா உயிர்களுக்கும் தேவையான உணவை இந்த பூமித்தாய் உறுதி செய்ததுபோல மனிதனுக்கும் தருகிறாள் ஆனால் அவனது பயத்தின் விளைகனியாகிய பேராசைக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. விளைவு ஒவ்வொரு இனக்குழுக்களுமிடையில் சண்டை சச்சரவு, போர் என்று விரிவடைந்துகொண்டே செல்கிறது.

காலனி ஆதிக்கத்தின் மூலம் உழைப்படிமைகளை உருவாக்கி உபரியைத்திரட்டிக்கொண்ட மனித இனம்  நாகரீகம் சமைத்த ஒரு குடிமைச்சமூகமாக மாறியது.

நாகரீகத்தின் விளைச்சளாக தற்போது வந்து சேர்ந்திருக்குமிடம் இயற்கை வளக்கொள்ளை. இத்தனையும் நிகழ்வது மனித சமூகத்தின் சொகுசு வாழ்க்கைக்காகத்தானே அதை ஏற்றுக்கொள்வதில் என்ன பிழை? என்றால் அதில்தான் இடியாப்பச்சிக்கலே ஆரம்பமாகிறது. வீட்டில் சொகுசாக இருக்க மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், தொலைக்கட்சி என நிறைந்திருக்க…

வெளியே உணவகங்கள், ஜவுளிக்கடைகள், திரையரங்குகள் திறந்திருக்க….

தொலைதூரம் பயணிக்க வாகனம், கப்பல், வானூர்தி என பறந்துசெல்ல காத்திருக்க…

இவற்றையெல்லாம் அனுபவித்து வாழ இந்த முதலிய கூட்டியக்க அமைப்பில் மனித இனம் வாழப்போவதில்லை இது உறுதி. மனித வாழ்க்கையை செப்பனிட்டுத்தருகிறேன் என்கிற போர்வையில் இந்த முதலாளித்துவ கட்டமைப்பு தனக்குத்தானே மிகப்பெரிய புதைகுழியைத்தோண்டிக்கொண்டிருக்கிறது.

பழைய நிலவுடமைச்சமூக குடும்பத்தில் மனித வளம் என்பது சொத்து.

நவீன குடும்ப அமைப்பில் மனித வளமென்பது சுமை.

சொத்தை பராமரிப்பதுபோல என்ன விலைகொடுத்தேனும் அடுத்த தலைமுறையை காப்பாற்ற நினைத்த மனித இனம் இப்போது அதை சுமையென கருதி பொறுப்பிலிருந்து முற்றாக விலகி நிற்கிறது.

கஷ்டப்பட்டு பெத்து, வளத்து ஆளாக்கி வாழ்றதுக்கு பெத்துக்காமலேயே இருந்துவிடலாம் எனும் நிலைக்கு நகர்கிறது. இன்னும் ஒரு படி மேலேபோய் ஆணும், பெண்ணும் இன்புறிருக்க கட்டாயம் திருமண பந்தத்திற்குள் இருந்தாக வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யார் வேண்டுமானாலும் யாரோடும் இணைந்து எப்படி வேண்டுமானாலும் வாழலாம்!

இன்னும் கூடுதலாக ஒரு படி மேலேபோய் ஆண், ஆண் தன்மையை இழந்து ஆணைக்காதலிப்பது.பெண், பெண் தன்மையை இழந்து பெண்ணைக்காதலிப்பதுன்னு அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

பூக்காத, காய்க்காத, கனிந்து பலன் கொடுத்து தலைமுறைகடத்த வக்கற்ற நிலையிலிருக்கும் ஒரு மரம் எத்தனை வனப்போடு இருந்தாலும் யாருக்கு என்ன? எப்படி கூட்டி கழித்துப்பார்த்தாலும் நவீன வாழ்க்கையென்பது சந்தனம்பேழையில் செய்த சவப்பெட்டிதான். மனித சமூகம் நாகரீகம் சமைத்துவாழ நவீன கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு பரிசளிக்க ஒருசில மனிதர்களை இந்தப்பிரபஞ்சம் உருவாக்கியது போல நவீனத்தை எதிர்த்து களமாடவும் ஒருசில மனிதர்களை பிரசவித்திருக்கிறது.

அவர்களின் நினைவைப்போற்றும் பொருட்டு, தற்சார்பு வாழ்வியலுக்காக துவங்கப்போகும் புதிய பண்ணைகளில் இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடலை வருடந்தோறும் புறவு அமைப்பு முன்னெடுக்கும்.

Close