"யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி"
மருத்துவ முகாம்
தற்சார்பு வாழ்வியலில் மருத்துவம் என்பது மொத்தம் மூன்று படிநிலைகளை உள்ளடக்கியது. ஏற்பட்டிருக்கும் நோய்க்கூறுகளுக்கேற்ற மருந்துகளை செய்யமூலிகைகளை தெரிந்து வைத்திருத்தல். அடுத்து மூலிகைகளை சரியாக இனங்கண்டு திரட்டுவது, அடுத்து திரட்டிய மூலிகைகளை மருந்து உட்கொள்ளும் வடிவமாக மாற்றுவது என்று முறைப்படுத்தலாம்.
இவற்றில் நம் மூதாதையர்கள் நம்மிடம் விட்டுச்சென்ற மருத்துவ நூல்களின் அறிவின்படி மூலிகைகளின் பெயர்களும், ஒருசில மருத்துவமுறைகளும் மக்களின் வாய்வழி விடுகதைகளாக இன்றும் எஞ்சி நிற்கின்றன. ஆனால் மூலிகைகளை இனங்கண்டு திரட்டும் அறிவும், பின்பு திரட்டிய மூலிகைகளை மருந்தாக்கும் நபர்களும் குறைந்துகொண்டே போகிறார்கள் என்பது தெளிவாகத்தெரிகிறது.
இந்த மூன்று புள்ளிகளையும் ஒருங்கிணைக்கிற ஆற்றல் தற்போது இயற்கை வழி வேளாண்மைக்கு உட்படுத்தப்படுகிற ஒவ்வொரு தோட்டத்திற்கும் இருக்கிறது என்பது திண்ணம்.
தேவைப்படும் நேரத்தில் உரிய மருத்துவம் கிடைக்கப்பெறாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமையோ அதற்கிணையான கொடுமை மூலிகை என நம்பி ஏதேனுமொரு பூண்டுச்செடியை மருந்தாக பயன்படுத்துவது.
மஞ்சள் கரிசாலை முடி வளர்வதற்கும், கல்லீரலைப்பலப்படுத்தவும் உதவுகிறது என்று நம்பப்படுகிற நிலையில் அதற்கிணையான வேறொரு பூண்டுசெடி இப்போது சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.
தற்போது பெரும்பாண்மையான நிலம் நஞ்சு பாய்ந்த நிலமாக மாறிக்கிடக்கும் நிலையில் தற்சார்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் மனிதர்கள் தங்களுக்குள் ஒரு குழுவாக ஒருங்கிணைவது மட்டுமல்ல தமிழ் மருத்துவர்களையும் ஒருங்கிணைத்துச்செல்வது காலத்தின் கட்டாயம்.