"கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து"
கலையனுபவம்
சந்தையிலிருந்து நாம் வாங்கி வந்த மூங்கில் கூடை, அழிஞ்சில் கூடை, விரலிக்கூடை போன்றவைகள் அவ்வப்போது பழுது ஏற்படுகிற பட்சத்தில் நகரத்து மனிதர்களைப்போல தொட்டதிற்கெல்லாம் துறைசார் வல்லுனர்களைத்தேடி அலையாமல் நாமே அதனை சரிசெய்ய முற்படவேண்டும்.
ஆம்! அதனை தெரிந்து வைத்திருப்பது நம் கற்பனைத்திறனையும், கலையுணர்வையும் மெருகேற்றுமேத்தவிர வாழ்வில் ஒருபோதும் சலிப்பேற்படுத்தாது. எடுத்தவுடனே முழுமையான பயிற்சி என்று போகாமல் கூடை அமைப்புகளில் ஏற்படுகிற சின்னச்சின்ன பிழைகளை சரி செய்வதின்மூலம் பின்னலின் மூலத்தை நாம் கண்டடையலாம்.
பின்னலில் நுட்பமென்பது ஒரே பண்புகளையுடைய இரண்டு அல்லது அதற்கும்மேம்பட்ட எண்ணிக்கையிலுள்ள பொருட்களை ஒத்திசைவாக வரும்பொருட்டு இணைத்து நமக்கு தேவைப்படுகிற வடிவத்திற்கு கொண்டு வருவதுதான். அந்த அடிப்படையைப்புரிந்துகொண்டால் பின்னல் மிகமிக எளிதாகிவிடும்.
பின்னல் நுட்பத்தை முதன் முதலில் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் மிக எளிதாக இருக்கிற பனையோலப்பொருட்களில் இருந்தே ஆரம்பிக்கலாம். அதில் அடிப்படையைக்கற்றுக்கொண்டபிறகு அதைவிட வலிமையாக இருக்கிற விரலி, பின்பு அதனினும் வலிமையாக இருக்கிற அழிஞ்சில், மூங்கில் என்று விரியலாம்.
எளிய வடிவங்களான ஏணி, சதுர தட்டி, கூரைத்தட்டி, வளைவுகள் செய்து பழகிய பிறகு காய்கறிக்கூடை, அன்னக்கூடை, பழக்கூடை, பூக்கூடை என நுட்பம் கூடிய வடிவத்திற்கு வந்தடைவோம். புட்டுகுழல், பாய், கைப்பை, தட்டு, முறம், தூவல், சொளவு என்று மேலும் நுட்பம் கூடும்போது நாம் பின்னலில் முழுமை எய்தியிருப்போம்.
தற்சார்பு வாழ்க்கையில் நமக்கு உபரியாக நிறைய நேரமும், நிறைய மூலப்பொருட்களும் கிடைக்கிற பட்சத்தில் குடும்பத்துடன் கலைப்படைப்பில் ஈடுபட பின்னல் ஒரு சிறந்த கைத்தொழிலாகவும் மாறவாய்ப்பிருக்கிறது.