"வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நால்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்

   – நாலடியார்

அன்றாடம்

தற்சார்பில் தோட்டம் அமைத்து  வாழத்துவங்கியதிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் தன்னிறைவு அடைந்திருப்போம்.

நம்முடைய பயன்பாட்டிற்குப்போக மீதமான எல்லாப்பொருட்களையும் எல்லா நேரங்களிலும் மதிப்புகூட்டி பாதுகாத்து வைக்கவோ அல்லது பொருட்களை மூட்டைகட்டி சந்தைக்கு தூக்கிச்சுமக்கவோ முடியாது. காரணம் பரபரப்பில்லாத எளிமையான வாழ்க்கையை வேண்டித்தான் தற்சார்பு என்கிற வடிவம் நோக்கி நாம் வந்திருக்கிறோம்

மறுபடியும் காசு,பணம், துட்டு, மணி மணின்னு திரிஞ்சோம்னா தற்சார்பு மொத்தமும் கெடும்.மாறாக நம் தோட்டத்திலேயே கடை விரித்து விற்பனையில் தற்சார்படையலாம்.

தினசரி விற்பனைப்பொருட்கள்

பால்

தற்சார்பைப்பொறுத்தவரைக்கும் பால் என்பது ஒரு விற்பனைப்பண்டம் அல்ல. மாறாக நம்நாட்டுமாடுகள் அதிகப்படியான பால் கறக்கும் தன்மையுடையதும் அல்ல. பால்கறக்கும்போதே கன்றுக்குட்டிக்கென்று ஒரு காம்பை ஒதுக்கிவிட்டு கறப்பதுதான் தற்சார்பு நிலைத்திருக்க நாம் செய்யும் மரியாதை. கன்றுக்குட்டிக்கு ஒரு காம்பு விட்டதுபோக மீதம் கறந்த மூன்றுகாம்பு பால் நம் குடும்ப உறுப்பினர்கள் நுகர்ந்ததுபோக மீதமிருந்தால் பண்ணைக்கு நேரடியாக வந்து வாங்கிச்செல்வோரிடம் விற்று காசாக்கலாம்.

காய்கறி

வெண்டை, தக்காளி, கத்தரி போன்றவை மக்களின் தினசரி தேவைக்கு வருகிறதோ இல்லையோ ஒருநாள் விட்டு ஒருநாள் செடியிலிருந்து அகற்றியே ஆகவேண்டும். காரணம் காய்க்கத்துவங்கியதிலிருந்து அதன் உற்பத்தித்திறன் கூடிக்கொண்டேசெல்லும் ஆதலால் அதனை தினசரி விற்பனைக்கு வைக்கலாம்

கீரைகள்

கொத்தமல்லிக்கீரை, வெந்தயக்கீரை, சக்ரவர்த்திக்கீரைஉள்ளிட்ட ஒருமுறைக்கீரைகள்....பாலக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட மறுதழைவுக்கீரைகள் மக்களிடத்தில் தினசரிப்பாயன்பாட்டிற்கு வரவேற்பு இருக்கிற பட்சத்தில் அவற்றையும் தோட்டத்திலேயே தினசரி சந்தைப்படுத்தலாம்.

"முல்லை அம்குழலார் முலைச் செல்வமும்
மல்லல் மாநகர்ச் செல்வமும் வார்கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே."
         -சீவக சிந்தாமணி

உள்ளூர் அவரால்  உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை  வேண்டும் இலங்கிழாய்!-தள்ளாது
அழுங்கல்  முதுபதி 'அங்காடி  மேயும்
பழங்கன்று  ஏறாதலும்  உண்டு'......

-பழமொழி நானூறு
Close